ரமண கேந்திரத்தில் பிரதோஷ பூஜை மற்றும் கார்த்திகை தீபம்
ரமண கேந்திரத்தில் பிரதோஷ பூஜை மற்றும் கார்த்திகை தீபம்
ADDED : டிச 14, 2024 09:45 PM

கார்த்திகை மாதத்தை ஒட்டி, புதுடெல்லி ரமண கேந்திரத்தில் டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை, பிரதோஷ பூஜை மற்றும் கார்த்திகை பரணி தீபம் ஏற்றுதல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. குரு வந்தனம், கணேச பூஜை மற்றும் கலச பூஜையுடன் வழிபாடு தொடங்கியது. இதையடுத்து, ஏகவார ருத்ராபிஷேகம், லகுன்யாசம், அதைத் தொடர்ந்து பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீ ருத்ர நமகம் மற்றும் சமகம் பாராயணத்தை தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதி, சிவார்ச்சனை மற்றும் நந்திக்கு அஷ்டோத்திரம் செய்யப்பட்டது. ஷோடசோபசார பூஜைக்கு பிறகு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீபம் ஏந்தி பக்தர்கள், கேந்திரா பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தனர். இதையடுத்து, பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்களுக்கு பரணி தீபம் காட்டப்பட்டது. பின்பு கேந்திரா மேல் தளத்தில் தீபங்கள் வைக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.