மத கலவரத்தை ஏற்படுத்த ஜமீர் முயற்சி பதவி நீக்க பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தல்
மத கலவரத்தை ஏற்படுத்த ஜமீர் முயற்சி பதவி நீக்க பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2024 12:12 AM

தார்வாட், : ''மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், ஜமீர் அகமது கான் பேசி வருகிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்,'' என, மத்திய உணவு பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசின் மதச்சார்பின்மை, முஸ்லிம்களை திருப்திபடுத்தும் கொள்கையால், ஹிந்து கோவில்களின் ஒரு அங்குல இடம் கூட அதிகரிக்கவில்லை.
நீக்கம்
கர்நாடகாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஜமீர் அகமது கான் பேசி வருகிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. அப்படி நோட்டீஸ் கொடுத்திருந்தாலும் அது தவறு தான்.
இதுகுறித்து அப்போது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. தெரிந்திருந்தால், வக்ப் வாரியத்தை எச்சரித்து, நோட்டீசை திரும்பப் பெறுமாறு கூறியிருப்போம். தற்போது விவசாயிகள் கவனத்துக்கு வந்துள்ளதால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் விவசாயிகளின் நிலம், வக்ப் வாரியத்திற்கு சொந்தமானதாக தான் உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, விவசாயிகள் இந்த நிலத்தை வைத்துள்ளனர். சமீப ஆண்டுகளில் வக்ப் வாரியத்தில் இணைக்கப்பட்ட சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வக்ப் அதாலத்
ஒவ்வொரு மாவட்டத்துக்கு சென்று வக்ப்அதாலத் நடத்துவதை, வக்ப் வாரியம் நிறுத்த வேண்டும்.
வக்ப் வாரிய சொத்து என்ற பெயரில், விவசாயிகளை திசை திருப்ப மாநில காங்கிரஸ் முயற்சிக்கிறது.
இதை கண்டித்து விஜயபுரா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், விவசாயிகள் போராட்டம்நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகஇருப்பேன்.
இவ்வாறு அவர்கூறினார்.