ஹிந்து கோவில்களை அழித்த கஜினி முகமதுவை புகழ்வதா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்
ஹிந்து கோவில்களை அழித்த கஜினி முகமதுவை புகழ்வதா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 31, 2026 12:50 AM

புதுடில்லி: 'ஹிந்து கோவில்களை அழித்த கஜினி முகமதுவையும், டில்லியை கையகப்படுத்திய லோதி வம்சத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து புகழ்ந்து வருகிறது' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 'கஜினி முகமதுவும், லோதியும் இந்தியாவை ஆண்டவர்கள்.
'அரசியல் ரீதியாக அவர்களை வெளிநாட்டினர் என கூறினாலும், உண்மையிலேயே அவர்கள் வெளிநாட்டினர் அல்ல. கஜினி முகமதுவையும், லோதியையும் அன்னியர்கள் எனக் கூறுவது தவறு' என, தெரிவித்திருந்தார்.
ஹமீத் அன்சாரியின் முன்னோர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்; தேசிய அளவில் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சூழலில், அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வன்முறை
இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:
நாட்டின் உண்மையான வரலாற்றை காங்கிரஸ் திரித்துக்கூறுகிறது. ஹிந்துக்களின் அடையாளங்கள் மீதும், புராதன சின்னங்கள் மீதும் நடத்தப்பட்ட வன்முறையை, அக்கட்சி குறைத்து மதிப்பிடுகிறது.
சமீபத்திய கருத்துகள் ஹமீத் அன்சாரியின் தனிப்பட்ட கருத்தல்ல; இது, காங்கிரஸ் கட்சியின் உணர்வோடு ஊறியவை. கடந்த 2020ல், டில்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வன்முறைக்கு காரணமான ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோரை இளம் தலைவர்கள் என காங்கிரஸ் புகழ்ந்தது.
ஹமீத் அன்சாரியும், காங்கிரஸ் அமைப்பும் இப்போது, குஜராத்தில் இருந்த சோமநாதர் கோவிலை அழித்து அவமதித்த ஆட்சியாளரான கஜினி முகமதுவை புகழ்கின்றனர். ஹிந்துக்களுக்கு எதிராக பல அட்டூழியங்களை செய்த அவுரங்கசீப் மற்றும் பிறரின் குற்றங்களை மூடிமறைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கொள்ளை
கடந்த 10 மற்றும் 11ம் நுாற்றாண்டை சேர்ந்த அரசரான கஜினி முகமது, இந்தியாவில் நுழைந்து பல்வேறு வளங்களை கொள்ளையடித்துச் சென்றதாக வரலாற்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
அந்த காலகட்டத்தில், ஹிந்து கோவில்கள் மீதும், மத அடையாளங்கள் மீதும் கஜினி முகமது கடும் தாக்குதல்கள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகழ்வதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

