ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வலுக்கு... 'லுக் அவுட் நோட்டீஸ்!'
ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வலுக்கு... 'லுக் அவுட் நோட்டீஸ்!'
ADDED : மே 03, 2024 01:21 AM

ஆபாச வீடியோ வழக்கில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி., பிரஜ்வலுக்கு எதிராக, சிறப்பு விசாரணை குழு, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்து உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
வீட்டு வேலைக்கார பெண் அளித்த பாலியல் புகாரில், ரேவண்ணா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். விசாரணைக்கு அவர் இன்னும் ஆஜராகவில்லை. இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், நேற்று காலை ரேவண்ணா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி பிரீத் விசாரித்தார். இன்று விசாரணையை ஒத்திவைத்தார்.
�
� முன்ஜாமின் கோரி தந்தை மனு தாக்கல்
பெங்களூரு, மே 3-
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாசன் தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33; முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.
சில பெண்களுடன் பிரஜ்வல் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள், கடந்த 23ம் தேதி வெளியாகின. இது குறித்து, சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துகிறது. கடந்த 27ம் தேதி பிரஜ்வல், ஐரோப்பிய நாடான ஜெர்மனி சென்று விட்டார்.
இதற்கிடையில், வீட்டு வேலைக்கார பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மீது, ஹொளேநரசிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறப்பு விசாரணை
இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கலபுர கியில் அளித்த பேட்டி:
எம்.பி., பிரஜ்வலுக்கு எதிராக, சிறப்பு விசாரணை குழு, 'லுக் அவுட் நோட்டீஸ்' எனப்படும், தேடப்படும் குற்றவாளி என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அனைத்து விமான நிலையங்கள், நீதிமன்றத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, பிரஜ்வல் ஏழு நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கலாம் என்று பிரஜ்வல் ஏதாவது செய்தால், அவர் கைது செய்யப்படுவார்.
அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி உள்ளது. அவர் இங்கு தான் உள்ளார். விசாரணைக்கு ஆஜராகா விட்டால், அவரும் கைது செய்யப்படுவார்.
பிரஜ்வல் மீது, இன்னொரு பெண்ணும், புகார் அளித்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறி உள்ளோம். இந்த வழக்கு, பல பெண்களின் மானம் சம்பந்தப்பட்ட விஷயம். வழக்கை அரசு எச்சரிக்கையுடன் கையாளும்.
பிரஜ்வல் ஜெர்மனிக்கு செல்ல பயன்படுத்தியது குடியுரிமை பாஸ்போர்ட். அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தினால், விசா இல்லாமல் சென்று விடலாம். குடியுரிமை பாஸ்போர்ட் கொடுப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி பார்த்தால் பிரஜ்வலை தப்பிக்க வைத்தது நாங்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
பிரஜ்வல் தரப்பிலிருந்து வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்தவிதமான கோரிக்கையும் வரவில்லை. அவருக்கு வெளியுறவு அமைச்சகத்திலிருந்து எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை.
முக்கிய பதவிகளை வகிப்போருக்கு வழங்கப்படும், 'டிப்ளோமடிக் பாஸ்போர்ட்' வைத்திருப்பவர்கள் ஜெர்மனி செல்வதற்கு விசா தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேவண்ணா குடும்பத்தின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பா.ஜ., பிரமுகரும், வழக்கறிஞருமான தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாகவும், வீடியோக்களை அவரே வெளியிட்டதாகவும் கூறி இருந்தார்.
ஆனால், சிறப்பு குழு விசாரணையில், கார்த்திக்கின் மொபைல் நம்பரில் இருந்து, வாட்ஸாப் வாயிலாக சில வீடியோக்கள் இன்னொரு நம்பருக்கு சென்று உள்ளது. அந்த நம்பர், காங்கிரஸ் பிரமுகர் ஒருவருடையது என்பது தெரிந்தது.
சந்தேகம்
அந்த பிரமுகர், ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலின் ஆதரவாளர். இதனால் வீடியோக்களை காங்கிரசார் வெளியிட்டனரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இத்தனை பிரச்னைக்கும் இடையில், பிரஜ்வலின் மேலும் சில ஆபாச வீடியோக்கள், சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகின.
ஹொளேநரசிபுரா அருகே உள்ள பண்ணை வீட்டில் வைத்து, பெண்களை ஆபாசமாக படம் எடுத்தார் என்று, பிரஜ்வல் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அந்த வீட்டில் சோதனை நடத்த, சிறப்பு விசாரணை குழு தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரஜ்வலின் பயண விபர டிக்கெட், நேற்று வெளியானது. ஜெர்மனியில் இருந்து வரும் 15ம் தேதி மதியம் 12:30 மணிக்கு, விமானம் புறப்படும் என்றும், 16ம் தேதி அதிகாலை 12:30 மணிக்கு, பெங்களூரில் தரையிறங்கும் என்றும் அந்த டிக்கெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீட்டு வேலைக்கார பெண் அளித்த பாலியல் புகாரில், ரேவண்ணா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். விசாரணைக்கு அவர் இன்னும் ஆஜராகவில்லை.
இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், நேற்று காலை ரேவண்ணா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி பிரீத் விசாரித்தார். இன்று விசாரணையை ஒத்திவைத்தார்.