ADDED : மே 29, 2024 04:09 PM

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி உள்ள ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, முன் ஜாமின் கேட்டு, பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ம.ஜ.த., தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹசன் தொகுதி எம்.பி.,. மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவர் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்று இருந்தார். அவரது தந்தை ரேவண்ணாவை போலீசார் கைது செய்து, ஜாமினில் வெளியே வந்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதி இருந்தது.
இச்சூழ்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சிறப்பு புலனாய்வு குழு முன்பு மே 31ம் தேதி ஆஜர் ஆவேன் எனக்கூறியிருந்தார். அவர் நாளை ( மே 30) நள்ளிரவு பெங்களூரு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தன் மீதான வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமின் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.