பா.ஜ.,வில் இணையும்படி பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்கினார்: முதல்வர் சுவேந்து
பா.ஜ.,வில் இணையும்படி பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்கினார்: முதல்வர் சுவேந்து
UPDATED : நவ 25, 2026 07:32 PM
ADDED : நவ 25, 2026 07:32 PM

கொல்கட்டா: ‘‘திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணையும்படி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்கினார்,’’ என, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க முதல்வராக பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி பதவி வகிக்கிறார். காங்கிரசில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 1998ல், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.
அக்கட்சியில் முக்கிய தலைவராக, 22 ஆண்டுகள் வலம் வந்த அவர், மாநில அமைச்சராகவும் பணியாற்றினார். எனினும், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, 2020ல், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அக்கட்சியின் முகமாக மாறிய அவர், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு முதல் வெற்றியை பெற்று தந்து, முதல்வரானார்.
இந்நிலையில், கொல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் சுவேந்து அதிகாரி பேசியதாவது:
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் என் உண்மையான ஆலோசகர். அவர் ஜனாதிபதியான பின், ஜனாதிபதி மாளிகையில் அவரை சந்தித்து பேசினேன். அப்போது, பிரணாப் முகர்ஜி என்னிடம், ‘நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை பற்றி யோசி. நீ ஓர் ஊழியராகவே இருக்க விரும்பினால், திரிணமுல் காங்கிரசிலேயே இரு. சொந்த காலில் சுயமாக முன்னேற விரும்பினால், மோடி உடன் சேரு’ என, அறிவுரை கூறினார்.
பிரணாப் முகர்ஜி இப்போது நம்முடன் இல்லை. எனவே, இதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்; ஒவ்வொரு இந்தியரும் அவரை மதிக்கின்றனர். திரிணமுல் காங்., ஒரு தனியார் நிறுவனத்தை போல செயல்படுகிறது. மம்தாவும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் இயக்குநர்கள் போல செயல்படுகின்றனர். அங்கு ஊழியராக இருக்க பிடிக்கவில்லை. அதனால், அங்கிருந்து வெளியேறி பா.ஜ.,வில் இணைந்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்., மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில், மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார். 2012 – 17 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், 2020 ஆகஸ்டில், உடல்நலக் குறைவால் காலமானார்.
