66 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; ரகோபூர் தொகுதியில் சஸ்பென்சை கூட்டும் பிரசாந்த் கிஷோர்
66 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; ரகோபூர் தொகுதியில் சஸ்பென்சை கூட்டும் பிரசாந்த் கிஷோர்
ADDED : அக் 13, 2025 03:44 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரகோபூர் தொகுதி வேட்பாளர் பெயர் அதில் இடம்பெறவில்லை.
பீஹார் சட்டசபை தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 என இருகட்டங்களாக நடக்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் கூட்டணியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளன.
இந்த தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் அல்லது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தேர்தல் களத்தில் இருக்கிறது. மாற்று அரசியல் என்ற பிரசாரத்துடன் வலம் வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.
இதில் 66 வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரகோபூர் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வியை எதிர்த்து இந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளிவந்தன. ஆனால் முதல் பட்டியல் போன்றே 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ரகோபூர் பெயர் இடம்பெறவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்ற பெயரில் 51 பேரை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டார். அதில் போஜ்புரி பாடகர் ரிதேஷ் பாண்டே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா உள்ளிட்ட பிரபலமானவர்கள் பெயர் இடம்பெற்று இருந்தன. 51 பேரில் 11 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 17 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 9 பேர் சிறுபான்மையின வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.