கட்சியை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர் பீஹார் தேர்தலில் களமிறங்க திட்டம்
கட்சியை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர் பீஹார் தேர்தலில் களமிறங்க திட்டம்
ADDED : அக் 03, 2024 12:57 AM
பாட்னா, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீஹாரில், 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் அரசியல் கட்சியை நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினார். 'அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சி களமிறங்கும்' என, அவர் அறிவித்தார்.
'ஜன் சுராஜ்'
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர், 47. இவர், 'ஐபேக்' என்ற நிறுவனத்தை துவக்கி, பா.ஜ., - காங்கிரஸ், - தி.மு.க., - திரிணமுல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல்களில் வென்று ஆட்சியமைக்க, வியூகங்களை வகுத்து தந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் வியூக நிபுணர் என்ற தன் பொறுப்பை துறந்த பிரசாந்த் கிஷோர், 'ஜன் சுராஜ்' என்ற இயக்கத்தை துவக்கினார்.
பீஹார் மாநிலம் முழுதும் பாத யாத்திரை மேற்கொண்ட அவர், 3,000 கி.மீ.,க்கும் மேல் நடந்து சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியான நேற்று தன், 'ஜன் சுராஜ்' இயக்கத்தை, அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த அக்கட்சியின் துவக்க விழாவில் அவர் கூறியதாவது:
பீஹார் மக்களுக்கு உரிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கவே ஜன் சுராஜ் இயக்கம் துவங்கப்பட்டதன் நோக்கம். இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள், ஓட்டு அரசியலுக்காக மாநில மக்களின் நலனை புறக்கணித்து வந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல்
ஆனால், நாங்கள் ஆட்சியில் அமர்ந்த 1 மணி நேரத்தில், மதுவிலக்கை ரத்து செய்து, அரசுக்கு வருவாயை உருவாக்க வழிவகை செய்வேன். நம் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி களமிறங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜன் சுராஜ் கட்சியின் செயல் தலைவராக முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மனோஜ் பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், முன்னாள் எம்.பி., மானசர் ஹுசேன், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி பவன் வர்மா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.