கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை
கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை
UPDATED : மே 28, 2024 06:42 PM
ADDED : மே 28, 2024 06:34 PM

சண்டிகர்: கொலை வழக்கில் பிரபல சாமியார் குர்மித் ராம் ரஹீம் உயர்நீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் நடத்தி வந்தவர் குர்மீத் ராம் ரஹீம்.இவர் ஆசிரம பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை பரோல் பெற்று வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை இன்று(28.05.2024) விசாரித்த உயர்நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.