UPDATED : ஏப் 10, 2025 11:04 PM
ADDED : ஏப் 10, 2025 10:41 PM

பெங்களூரு: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கிறது. இப்போட்டியில் டில்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சால்ட் மற்றும் கோஹ்லி அதிரடி துவக்கம் தந்தனர். இதனால் இந்த அணி 3 ஓவரில் 50 ரன்களை கடந்தது. ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தது. ஆனால், 3.5 ஓவரில் சால்ட் 37 ரன்கள் எடுத்து இருந்த போது ரன் அவுட் ஆனார்.
இதன் பிறகு பெங்களூரு அணியின் ரன்வேகம் குறைய துவங்கியது. 5.4 ஓவரில் பெங்களூரு அணி 64 ரன்கள் எடுத்து இருந்த போது படிக்கல் 1 ரன்னில் அவுட்டானார்.22 ரன்கள் எடுத்து இருந்த கோஹ்லி, நிகம் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது பெங்களூரு அணி 74 ரன்கள் எடுத்திருந்தது.லிவிங்ஸ்டன் 4 ரன்களில் எம்எம் சர்மா பந்துவீச்சிலும், ஜிதேஷ் சர்மா 3 ரன்னிலும் அவுட்டாகினர்.குல்தீப் யாதவ் பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ரஜத் பட்டிடர் 25 ரன்களில் அவுட்டானார்.
பெங்களூரு அணி 7 வது விக்கெட்டை இழந்தது. க்ருனால் பாண்டியா 18 ரன்கள் எடுத்து இருந்த போது நிகம் பந்துவீச்சில் ஏஆர் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
164 ரன்களை வெற்றி இலக்காக களம் இறங்கிய டில்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டில்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி பெற்றது.