ADDED : மே 06, 2025 04:56 AM

சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில் மே 14ல் நடை திறக்கப்படுவதால், 15 முதல் 19 -வரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மே 18 அல்லது 19ல் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பைக்கு செல்கிறார். அங்கிருந்து நடந்தோ அல்லது டோலி மூலமாகவோ அவர் சபரிமலை சன்னிதானம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சன்னிதானம் விருந்தினர் மாளிகையில், கூடுதல் வசதிகளுடன் அறை தயாராகிறது. அந்த இரு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முர்மு, சபரிமலை வரும் பட்சத்தில், பதவியில் இருக்கும்போது, இங்கு வரும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.