மனித உரிமைகளுக்கான கட்டமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; ஜனாதிபதி பெருமிதம்
மனித உரிமைகளுக்கான கட்டமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; ஜனாதிபதி பெருமிதம்
ADDED : டிச 11, 2025 07:37 AM

புதுடில்லி: உலகளவில் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
' தினசரி அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்தல் - பொதுச் சேவைகள் மற்றும் அனைவருக்கும் கண்ணியம்' என்ற தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது; உலகளவில் மனித உரிமைகள் ஒரு நியாயமான, சமமான மற்றும் அன்பான சமுதாயத்தின் அடித்தளம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உலகளவில் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், மனிதர்களின் கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியில் வேரூன்றிய ஒரு உலகத்தை எதிர்பார்த்தனர். 'வசுதைவ குடும்பகம்' என்பது உலகம் ஒரு குடும்பம் என்று பொருள்படும் நமது பழங்கால தத்துவமாகும். உலகளாவிய மனித உரிமைகளை இது பிரதிபலிக்கிறது. மனித உரிமைகள் கொள்கைகளுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2026ல் தொடங்கி மூன்று ஆண்டு காலத்திற்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு, நாம் 7வது முறையாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்கு சான்று. எங்கள் அர்ப்பணிப்பு மிகவும் தெளிவானது.ஒவ்வொரு தனிநபரும் சுதந்திரத்துடனும், மரியாதையுடனும், சமத்துவத்துடனும் வாழக்கூடிய, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல் கொண்டாடப்படும் ஒரு நாட்டைக் கட்டமைப்பதே நோக்கமாகும். நமது அரசியலமைப்பு சட்டத்திலேயே மனித உரிமைகளுக்கு சாராம்சங்கள் அடங்கியுள்ளன. நீதியின்றி அமைதி இல்லை, அமைதியின்றி நீதி இல்லை என்ற உண்மையை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

