ADDED : ஜன 06, 2024 07:09 AM
பெங்களூரு: மைசூரு - சாம்ராஜ்நகர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு, எட்டு வாரங்களில் தேர்தல் நடத்த, கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மைசூரு - சாம்ராஜ்நகர் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவராக இருப்பவர் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா. கடந்த மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால், கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை, ராஜினாமா செய்ய தயாராக உள்ளார். ஆனால் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்தாமல், அரசு அலட்சியம் காட்டுகிறது.
தோல்வி பயத்தில் முதல்வர் சித்தராமையா தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதாக, ஹரிஷ் கவுடாவின் தந்தையும், எம்.எல்.ஏ.,வுமான ஜி.டி.தேவகவுடா குற்றச்சாட்டினார்.
தேர்தலை நடத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீது விசாரணை நடந்தது. நேற்று நடந்த விசாரணையின்போது, எட்டு வாரங்களுக்குள் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த, நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார்.