ADDED : மார் 22, 2026 05:48 AM

மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே கோவர்தனில் அமைந்துள்ள டங்காட்டி கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழிபாடு நடத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மூன்று நாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு 19ம் தேதி வந்தடைந்தார்.
அங்கு, ராஜஜென்ம பூமியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, மதுரா நகரில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் அமைந்துள்ள கோவில்களில் நேற்று முன் தினம் வழிபாடு நடத்தினார். அன்று இரவு மதுரா நகரில் தங்கினார்.
மதுரா அருகே கோவர்த்தன் மலையைச் சுற்று நேற்று கிரிவலம் சென்றார். அதைத் தொடந்து, டங்கட்டி கோவிலில் 11 கிலோ பால், தயிர், தேன், நெய் ஆகியவற்றைக் கொண்டு மஹா அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கிரிராஜ் மஹராஜ் வெள்ளிச் சிலை, சால்வை மற்றும் பிரசாதம் ஆகியவை வழங்கப் பட்டன.
அதைத் தொடர்ந்து, மான்ஸி கங்கா அருகே அமைந்துள்ள முகுத் முகர்பிந்த் கோவிலிலும் ஜனாதிபதி வழிபாடு செய்தார்.
திட்டமிட்ட நிகழ்ச்சிகள் நிறைவு பெற்ற பின், ஹெலிகாப்டரில் டில்லி புறப்பட்டார்.
முன்னதாக, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் அதிகாரிகள், ஜனாதிபதியை வரவேற்று, மூன்று நாட்களும் உடனிருந்து அனைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
ஜனாதிபதியுடன் அவரது மகள் மற்றும் பேத்திகள் வந்திருந்தனர்.

