அமெரிக்க சிறையில் அதிபர் மதுரோ அடைப்பு; வெனிசுலாவில் இடைக்கால அதிபர் நியமனம்
அமெரிக்க சிறையில் அதிபர் மதுரோ அடைப்பு; வெனிசுலாவில் இடைக்கால அதிபர் நியமனம்
UPDATED : ஜன 04, 2026 02:12 PM
ADDED : ஜன 04, 2026 09:43 AM

கராகஸ்: வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வெனிசுலாவில் 40 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்தது. வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. ''வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்'' என இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார்.
டெல்சி ரோட்ரிக்ஸ் யார்?
* டெல்சி ரோட்ரிக்ஸ் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் வெனிசுலா நாட்டின் துணை அதிபராக நியமனம் செய்யப்பட்டார். இவர் தற்போது துணை அதிபர் பதவியுடன் நிதி மற்றும் எண்ணெய் துறை அமைச்சராகவும் உள்ளார். மதுரோவின் சோசலிச அரசை பாதுகாத்ததற்காக, டெல்சி ரோட்ரிக்ஸ் -ஐ மதுரோவால் புலி என்று வர்ணிக்கப்பட்டு இருக்கிறார்.
* 1969ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்த 56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ் கராகஸ் நகரத்தைச் சேர்ந்தவர். இவர் 1970களில் புரட்சிகர லிகா சோசலிஸ்டா கட்சியை நிறுவிய ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸின் மகள் ஆவார்.
* இவர் வெனிசுலாவின் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு வழக்கறிஞர். கடந்த 10 ஆண்டுகளில் இவரது அரசியல் செல்வாக்கு வேகமாக உயர்ந்தது. இவர் 2013- 2014ம் ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 2014 முதல் 2017ம் ஆண்டு வரை வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
ஏன் தாக்குதல்?
அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கியதற்கான காரணங்கள் குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான முயற்சி. வெனிசுலா போதைப்பொருட்களுக்கான ஒரு முக்கியப் போக்குவரத்துப் பாதை என தாக்குதலுக்கான காரணத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.

