தமிழக சிறுமி ஜனனி உட்பட 17 பேருக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
தமிழக சிறுமி ஜனனி உட்பட 17 பேருக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
ADDED : டிச 27, 2024 02:00 AM

புதுடில்லி, தமிழகத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுமி உட்பட 17 பேருக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கி கவுரவித்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் கலை மற்றும் கலாசாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு, 14 மாநிலங்களைச் சேர்ந்த 10 சிறுமியர் உட்பட 17 பேர் விருதுக்கு தேர்வாகினர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஜனனி உட்பட 17 பேருக்கும் டில்லியில் நேற்று நடந்த விழாவில் பதக்கம், சான்றிதழ் மற்றும் பாராட்டு பத்திரம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அதன்பின் அவர் பேசியதாவது:
குழந்தைப் பருவத்திலேயே, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இவர்களால், ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. எல்லையற்ற திறன்களை வெளிப்படுத்தி, மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இவர்களின் அற்புதமான சாதனைகளுக்கு என் வாழ்த்துகள்.
வாய்ப்புகளை வழங்குவது, குழந்தைகளின் திறமைகளை அங்கீகரிப்பதும் நம் பாரம்பரியத்தின் ஒரு பகுதி.
இதை, நாம் ஒவ்வொருவரும் வலுப்படுத்த வேண்டும். 2047ல், சுதந்திர தின நுாற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும்போது, இவ்விருது பெற்றவர்கள், நாட்டின் அறிவொளி பெற்ற குடிமக்களாக இருப்பர். இத்தகைய திறமையான சிறுவர் - சிறுமியர் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர்களாக மாறுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.