கத்தார் கொடுத்த விமானத்தை பரிசாக ஏற்றார் அதிபர் டிரம்ப்
கத்தார் கொடுத்த விமானத்தை பரிசாக ஏற்றார் அதிபர் டிரம்ப்
ADDED : மே 23, 2025 12:18 AM

வாஷிங்டன்: கத்தார் மன்னர் குடும்பம் பரிசாக வழங்கிய 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானத்தை டிரம்பின் பயன்பாட்டுக்காக அமெரிக்க ராணுவ அமைச்சகம் நேற்று ஏற்றுக்கொண்டது.
அமெரிக்க அதிபரின் பயணங்களுக்கு போயிங் 747 -- 200பி வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் அமெரிக்க அதிபர் இருந்தால், அது 'ஏர் போர்ஸ் ஒன்' என அழைக்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள், 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விமானப் படையில் சேர்க்கப்பட்டவை. இதில் அதிபர் அலுவலகம், ஏவுகணைகள், அணு கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன.
இருப்பினும் பழமையாகிவிட்ட இந்த விமானத்தை மாற்ற டிரம்ப் முடிவு செய்தார். இதற்காக இரண்டு விமானங்கள் வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அவர்கள் விமானத்தை வழங்க காலதாமதம் செய்தனர்.
இந்நிலையில், டிரம்பிற்கு கத்தார் மன்னர் குடும்பம் போயிங் 747- - 8 என்ற விமானத்தை பரிசளிக்க விரும்பியது. அதை டிரம்ப் ஏற்பதாக அறிவித்தார். இது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என ஜனநாயக கட்சியினர் விமர்சித்தனர்.
அதை புறக்கணித்த டிரம்ப், 'இது தற்காலிக ஏர் போர்ஸ் ஒன்னாக பயன்படும். என் பதவிக் காலத்திற்கு பின் அதிபர் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
இந்த பரிசை ஏற்பதால் மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி பணத்தை மிச்சப்படுத்தியுள்ளேன்' என்றார்.
உலகின் ஒரே வல்லரசான அமெரிக்காவின் அதிபர், ஒரு சிறிய நாட்டின் விமானத்தை அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு பயன்படுத்த போகிறார் என்பது அமெரிக்க மக்களை கவலை அடைய செய்துள்ளது.