ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்; ஆட்சி அமைக்க உமர் அப்துல்லாவுக்கு கிடைத்தது வழி!
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்; ஆட்சி அமைக்க உமர் அப்துல்லாவுக்கு கிடைத்தது வழி!
ADDED : அக் 14, 2024 08:15 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, யூனியன் பிரதேசத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்தது.
90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, அவர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, யூனியன் பிரதேசத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்தது.
ஜூன் 19ம் தேதி, 2018ம் ஆண்டு மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க வழி கிடைத்தது.
நிருபர்கள் சந்திப்பில், உமர் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரை ஒன்றிணைப்பதும், தேர்தலின் போது பரவிய வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதும் எங்கள் முன்னுரிமையாகும். மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும், அதனால் மாநிலம் சரியாகச் செயல்பட முடியும், மேலும் நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.