ADDED : ஜன 30, 2025 11:40 PM
பெங்களூரு; பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் மொபைல் போனில் 1 என்ற நம்பரை அழுத்தியதால், வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ள சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரில் சமீப காலமாகவே ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. போலீஸ், சி.பி.ஐ., அதிகாரிகள் என சைபர் திருடர்கள் பல வேடங்களை போட்டு, மக்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகின்றனர்.
இதில் முதியவர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த இளம் தலைமுறையினரும் சிக்கி தவிக்கின்றனர். போலீசார் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
பெங்களூரு, ஹொசகெரேஹள்ளி பகுதியில் 57 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். இவரது மொபைல் போனுக்கு கடந்த 20ம் தேதி மாலை 3:55 மணி அளவில், பாரத் வங்கியில் இருந்து போன் வந்து உள்ளது.
வங்கியில் இருந்து பேசுவது போல, ஆங்கில குரலில் தானியங்கியில் பேசி உள்ளனர்.
'உங்கள் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் வேறு கணக்கிற்கு மாற்றப்பட உள்ளது. இந்த பரிவர்த்தனையை, செய்ய வேண்டும் என்றால் எண் 3 ஐ அழுத்தவும்; செய்ய வேண்டாம் என்றால் எண் 1 ஐ அழுத்தவும்' என கூறப்பட்டு உள்ளது.
இதை கேட்டு பதற்றம் அடைந்த அவர். பரிவர்த்தனையை தடுப்பதற்காக, எண் 1 ஐ அழுத்தி உள்ளார். இந்த வேளையில், அவர் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்து பதறியவர், உடனே அருகில் உள்ள வங்கிக்கு சென்று முறையிட்டு உள்ளார்.
வங்கி மேலாளர் அறிவுறுத்தலின் படி, 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தார். பின், கிரிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.
இது குறித்து, போலீசார் தரப்பில் கூறியதாவது:
வெறும் நம்பரை அழுத்துவதன் மூலம் மட்டும் பணத்தை திருட முடியாது. ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு போன்றவற்றின் தகவல்களை பெற்று இருந்தால் மட்டுமே பணத்தை திருட முடியும்.
ஆனால், புகார் செய்தவர் இதுபோன்ற எத்தகவலையும் தரவில்லை என்கிறார். இவ்வழக்கை தீவிரமாக விசாரித்தால் தான் பணம் திருடப்படதற்கான உண்மை காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறிளனர்.