1.5 கி.மீ., தனியார் மேம்பால சாலை பெங்களூரில் 'பிரெஸ்டிஜ்' அமைக்கிறது
1.5 கி.மீ., தனியார் மேம்பால சாலை பெங்களூரில் 'பிரெஸ்டிஜ்' அமைக்கிறது
ADDED : ஜூலை 08, 2025 12:21 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு வெளிவட்டச் சாலை மற்றும் தங்கள் தொழில்நுட்ப பூங்கா இடையே, 1.5 கி.மீ., நீள மேம்பால சாலை அமைக்க, 'பிரெஸ்டிஜ்' கட்டுமான நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
பொதுவாக மேம்பால சாலைகளை அரசு தரப்பிலிருந்து கட்டுவது தான் வழக்கம். பெங்களூரின் பெலாந்துாரில் 'பிரெஸ்டிஜ் பீட்டா டெக் பார்க்' என்ற பெயரில் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது.
அங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் வெளிவட்டச் சாலை உள்ளது.
பூங்கா ஊழியர்கள் 5,000 பேர் பயன்பெறும் வகையில் மேம்பாலம் கட்ட, கடந்த 2022, 2023ல், 'பிரெஸ்டிஜ்' நிறுவனம், பெங்களூரு பெருநகர வளர்ச்சி அமைப்பான பி.பி.எம்.பி.,யிடம் அனுமதி கேட்டது. அதற்கு கடந்த ஏப்ரலில் மாநில அரசு அனுமதி அளித்தது.
மேம்பால சாலையில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும், மேம்பால சாலைக்கு கீழே செல்லும் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
'பொது, தனியார் பங்களிப்பில் நகரின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க, இது ஒரு துவக்கமாக இருக்கும்' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.