கோவில்களுக்கு இலவசமாக குடிநீர் டேங்கர் அரசுக்கு அர்ச்சகர்கள் சங்கம் வலியுறுத்தல்
கோவில்களுக்கு இலவசமாக குடிநீர் டேங்கர் அரசுக்கு அர்ச்சகர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2024 10:55 PM
பெங்களூரு: 'தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கோவில்களுக்கு தினமும் இலவசமாக தண்ணீர் டேங்கர்களில் தண்ணீர் வினியோகிக்க வேண்டும்' என, அரசுக்கு, அர்ச்சகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்துடன் பக்தர்களுக்கு பிரசாதமும், கோவில் சார்பில் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே வருகின்றனர்.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளதால், கோவில்களிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அகில கர்நாடக ஹிந்து கோவில் அர்ச்சகர்கள் சங்கத்தின் தீட்சித் கூறியதாவது:
பிரச்னை இல்லை
மஹாலட்சுமி லே - அவுட் தொட்ட ஆஞ்சநேயர் கோவில் உட்பட மல்லேஸ்வரத்தை சுற்றி உள்ள கோவில்களில் எந்த பிரச்னையும் இல்லை. அதேவேளையில் சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. சில இடங்களில் குறைந்தளவே தண்ணீர் வருகிறது. இந்நிலை நீடித்தால் சிரமம் ஏற்படும்.
நகரின் பல கோவில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இறைவனுக்கு பால், தயிர் சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால், அதிகளவில் நீர் தேவைப்படும். தற்போது இதை கட்டுப்படுத்தி வருகிறோம். பிரசாதம் தயாரிக்க வடிகட்டிய நீர் எடுத்து வரப்படுகிறது.
மற்ற வேவைகளுக்கு டேங்கர் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். கோட்டே வெங்கடேஸ்வரா கோவில் உட்பட சில இடங்களில் பிரசாதம் தயாரிப்பதிலும் சிக்கல் உள்ளது. எனவே, கோவில்களுக்கு தினமும் டேங்கர்களில் இலவசமாக தண்ணீர் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பனசங்கரி கோவில் செயல் அதிகாரி லட்சுமி கூறியதாவது:
வழக்கமாக சாதாரண நாட்களில் 1,000 பேரும்; செவ்வாய்க்கிழமைகளில் 5,000 பேரும்; வெள்ளிக்கிழமைகளில் 8,000 பக்தர்களும் வருகை தருகின்றனர்.
பிரசாதம்
காலை வேளையில் பக்தர்களுக்கு பிளேட்டுக்கு பதிலாக, சிறிய பாக்குமட்டையில் பிரசாதம் வழங்கி வருகிறோம். பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்யும் வகையில், குழாயில் தண்ணீர் குறைவாக வரும் வகையில் வடிவமைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசவனகுடி தொட்ட கணபதி கோவிலின் விஸ்வநாத் கூறுகையில், ''கோவிலில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம், சிறிதளவு தண்ணீர் வருகிறது. அதை அப்படியே நிர்வகித்து வருகிறோம். அடுத்த இரண்டு மாதங்கள் எப்படி என தெரியவில்லை,'' என்றார்.

