'நமக்கென்று ஒரு விண்வெளி நிலையம்' பணி நடந்து வருவதாக பிரதமர் அறிவிப்பு
'நமக்கென்று ஒரு விண்வெளி நிலையம்' பணி நடந்து வருவதாக பிரதமர் அறிவிப்பு
ADDED : ஆக 24, 2025 01:57 AM
புதுடில்லி: ''நமக்கென்று ஒரு விண்வெளி நிலையம் வேண்டும்,'' என்ற, இந்தியாவின் லட்சிய கனவை தேசிய விண்வெளி தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் தேசிய விண்வெளி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா இன்று, 'கிரையோஜெனிக்' இயந்திரங்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது.
நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளின் கடின உழைப்பால், 'ககன்யான்' திட்டத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும். வரும் காலங்களில் இந்தியா தன் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்களுக்கு முன், நான் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சந்தித்தேன்-. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ண கொடியை ஏற்றி, ஒவ்வொரு இந்தியரையும் பெருமையில் ஆழ்த்தினார். அந்த உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அவருடனான உரையாடலின் வாயிலாக, புதிய இந்தியாவின் இளைஞர்களின் மகத்தான தைரியத்தையும், எல்லையற்ற கனவுகளையும் நான் கண்டேன்.
இக்கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்ல, இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவை நாங்கள் தயார் செய்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.