ADDED : ஜன 04, 2024 01:37 AM
புதுடில்லிஆங்கிலேயர்களை எதிர்த்து, 18ம் நுாற்றாண்டில் வீரத்துடன் போரிட்ட ராணி வேலு நாச்சியார் மற்றும் பெண் கல்விக்கு வித்திட்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே ஆகியோரின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இருவருக்கும் புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் பிறந்த தினத்தில் இருவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் இருவரும் கருணை மற்றும் தைரியம் வாயிலாக சமுதாயத்திற்கு உந்து சக்தியாக விளங்கினர்.
நம் தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவை விலைமதிப்பற்றது. இருவரும் கலங்கரை விளக்கம் போன்றவர்கள். அவர்களது செயல்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் சக்தியை அதிகரிக்க உதவும்.
சமூக சீர்திருத்தம் மற்றும் பெண் கல்வியில் புலே ஆற்றிய பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் வேலு நாச்சியார்.
அதனால் தான், தமிழகத்தைச் சேர்ந்த என் சகோதர -- சகோதரிகள், தைரியமான பெண் என்ற அர்த்தத்தில், 'வீர மங்கை' என அவரை இப்போதும் நினைவுகூர்கின்றனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் பெருமிதம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், 18ம் நுாற்றாண்டிலேயே தென்னகத்தின் தியாக அத்தியாயங்களை தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்த நாள் இன்று.
வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைபலத்தை எதிர்த்து, உயிரை விட தன்மானம் தான் பெரிதென தமிழரின் பண்பை பறைசாற்றிய இரண்டு பேரின் வீரத்தை, இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்.
கடந்த 1857ம் ஆண்டு, சிப்பாய் கலகத்திற்கு ஒரு நுாற்றாண்டுக்கு முன்பிருந்தே, விடுதலை போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழகம் என, தம் நெஞ்சில் பதிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.