தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்கிறார் பிரதமர்: ராகுல் குற்றச்சாட்டு
தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்கிறார் பிரதமர்: ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : மார் 31, 2024 06:08 PM
ADDED : மார் 31, 2024 03:13 PM

புதுடில்லி: ‛‛ லோக்சபா தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பிரதமர் முயற்சி செய்கிறார்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
முதல்வர் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து டில்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பிரதமர் முயற்சிக்கிறார். பெரிய கட்சியான காங்கிரசின் வங்கிக்கணக்கை முடக்குகிறார்கள். என்ன மாதிரியான தேர்தல் இது. பாஜ., வால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது.
எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். மின்னணு ஓட்டு இயந்திரம், மேட்ச் பிக்சிங், சமூக வலைதளம் மற்றும் பத்திரிகைகள் மீதான அழுத்தம் இல்லாமல் பா.ஜ.,வால் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது.
அரசியல் சாசனம் என்பது மக்களின் குரல். அதனை முடிவுக்கு கொண்டு வந்தால், நாட்டிற்கு ஆபத்து ஏற்படும். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பா.ஜ., எம்.பி., கூறுகிறார். இது அவர்களது கொள்கையை சோதனை செய்வதற்கான முயற்சி ஆகும்.
அவர்களுக்கு எதிராக நீங்கள் முழு முயற்சியுடன் ஓட்டுப் போடாவிட்டால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். அவர்கள் வெற்றி பெற்றால், அரசியல்சாசனத்தை அழித்துவிடுவர். இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. நாட்டையும் அரசியல்சாசனத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். இவ்வாறு ராகுல் பேசினார்.
விரட்ட வேண்டும்
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டவும் விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சர்வாதிகாரத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும். பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்.,ம் விஷம் போன்றவை. விஷத்தை சாப்பிட்டால், மரணம் தான் ஏற்படும். இவ்வாறு கார்கே பேசினார்.
விடுதலை செய்க
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசும் போது, தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களை அடக்குவதையும் கட்சிகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

