ADDED : ஜன 29, 2024 07:20 AM

ராய்ச்சூர்: ''எங்கள் கனவை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிவிட்டார். அயோத்தி ராமர் கோவில் கட்ட கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இதற்கு 500 ஆண்டு வரலாறு உண்டு,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எங்கள் கனவை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கி விட்டார். அயோத்தி ராமர் கோவில் கட்ட கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இதற்கு 500 ஆண்டு வரலாறு உண்டு.
கடந்த சில நாட்களுக்கு முன், 30 ஆண்டுகளுக்கு முன் ஹூப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, ஹிந்து பிரமுகர் ஸ்ரீகாந்த் பூஜாரியை காங்கிரஸ் அரசு கைது செய்தது.
ஹிந்துக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது பற்றி, சிந்திக்கவில்லை.
லோக்சபா தேர்தல் பின்னணியில், பெங்களூரில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிறது. வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், அதை நிறைவேற்றுவதாக பொய்களை பரப்பி வருகின்றது.
காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. புதிய திட்டத்தை கொண்டு வர முடியாது. 14 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் இருந்தும், நம் மக்களின் நம்பிக்கை பொய்யானது.
ஆட்சிக்கு வந்தால், பத்து கிலோ அரிசி தருவேன் என்றனர்; ஆனால் எங்கே கொடுத்தனர்.
மத்திய அரசிடம் இருந்து ஐந்து கிலோ அரிசி வருகிறது. ஒரு கிலோ அரிசி கூட கொடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் அரசு உள்ளது.
இலவச மின்சாம் எங்கே. நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தனர்.
எஸ்.சி., - எஸ்.டி., துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு பணிக்கு ஒதுக்குகின்றனர். இளைஞர் நிதிக்கு 65 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாக்குறுதியிலும் அநீதி இழைத்து உள்ளனர்.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் மானியத்துக்காக காத்திருக்காமல், நிவாரணம் வழங்கினார். நீங்கள் ஏன் மத்திய அரசை நோக்கி செல்கிறீர்கள். மாநில அரசு ஏன் தன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.