UPDATED : ஜூன் 05, 2024 11:37 PM
ADDED : ஜூன் 05, 2024 11:33 PM

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை கூட்டணி கட்சியினர், அவரிடம் கொடுத்தனர். நாளை, புதிதாக தேர்வாகி உள்ள இக்கூட்டணியின் அனைத்து எம்.பி.,க்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்த பின், ஜனாதிபதியை சந்தித்து, ஆட்சி அமைக்கக் கோரும் நடைமுறைகள் நடந்தேறும்.
நேற்று காலை, பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்சியின் கடைசி அமைச்சரவை கூட்டம் என்பதாலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடக்கும் கூட்டம் என்பதாலும், பல மத்திய அமைச்சர்கள், மிகுந்த உணர்ச்சிப் பெருக்கில் இருந்ததை கவனிக்க முடிந்தது.
லோக்சபாவை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான ஆவணத்துடன், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மோடியும், கட்சித் தலைவர் நட்டாவும் சந்தித்தனர்.
அங்கு தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தார் மோடி. அதை ஏற்ற ஜனாதிபதி, புதிய ஆட்சி அமையும் வரை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவிகளில் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
நேற்று மாலை, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள அறிவுறுத்தலை ஏற்று, அரசியலமைப்புச் சட்டம் 85வது பிரிவு, உட்பிரிவு 2ன் படி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், 17வது லோக்சபாவை கலைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி
அதன் பின், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், பிரதமர் இல்லத்தில் நடந்தது. ஒருமணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடுநாயகமாக மோடி அமர்ந்திருக்க, அவரது இடப்புறம் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அடுத்ததாக, ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ்குமார், அதற்கு அடுத்ததாக மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
பிரதமருக்கு வலப்புறத்தில், பா.ஜ., தலைவர் நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
மற்ற கட்சிகளின் தலைவர்களான பவன் கல்யாண், ஜிதன் ராம் மஞ்சி, பிரபுல் படேல், சிராக் பஸ்வான், குமாரசாமி, அனுபிரியா படேல், ஜெயந்த்சிங் சவுத்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.
தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாகவும், இந்த கூட்டணியின் சார்பில் புதிய அரசை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதாகவும் உறுதிமொழி கடிதங்களை, அனைவரும் பிரதமரிடம் வழங்கினர்.
கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய கையெழுத்துகளும் தலைவர்களிடம் பெறப்பட்டன.
'ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, பயன் ஏற்படும் வகையிலான கொள்கைகளுடன் இந்த கூட்டணி, உறுதியுடன் செயலாற்றும்' என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மோடி பேசுகையில், ''தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக, என்னை ஒரு மனதாக தேர்வு செய்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.,க்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
மூன்றாவது முறையாக மோடியே பிரதமர் ஆவதற்கு ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உரிமை
புதிய அரசை அமைப்பது குறித்தும், ஜனாதிபதியை நேரில் சந்தித்து ஆட்சியைமைக்க உரிமை கோருவது குறித்தும், பதவியேற்பு விழா தேதி குறித்தும், பார்லிமென்ட் கூடும் தேதி குறித்தும் தலைவர்கள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.
வரும் 7ம் தேதி தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் நடத்தி, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை, அன்றைய தினமே ஜனாதிபதியிடம் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்தனர்.
தாமதம் ஏற்படாமல், புதிய ஆட்சியை விரைந்து அமைக்க வேண்டும் என, நிதிஷ்குமார் வலியுறுத்தியதை, மற்ற தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். புதிய அரசு அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிப்பதற்காக, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியினரின் கோரிக்கைகள் பல, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவதால், அவற்றை நிறைவேற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை மறுதினத்திற்குள் இந்த விஷயத்தில் தெளிவு கிடைத்து விடும்; அன்றே பதவி ஏற்பு விழா நடக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். எனினும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
- நமது நிருபர் குழு -