அமெரிக்காவில் பிரதமர் மோடி; அஜித் தோவல் போகாத காரணம் இதுதான்!
அமெரிக்காவில் பிரதமர் மோடி; அஜித் தோவல் போகாத காரணம் இதுதான்!
ADDED : செப் 23, 2024 08:05 AM

புதுடில்லி: பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் செல்லாதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்தும் உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது, அவருடன் செல்லும் அதிகாரிகளின் பட்டியலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த சந்திப்பின் போது, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் பங்கேற்ற நிலையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவர் பங்கேற்கவில்லை. மாறாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயஷங்கர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஜித் தோவல், பிரதமர் மோடி செல்லும் சுற்றுப்பயணங்களில் கட்டாயம் இடம் பெறக்கூடியவர். பாதுகாப்பு மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்த அவர் அந்நாட்டு அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேசினார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர், மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இடம்பெறாதது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவில் தன்னை படுகொலை செய்ய சதி செய்ததாக கூறி, காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாகவே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மத்திய அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவதால் தான், அஜித் தோவல் அமெரிக்கா செல்லவில்லை என்று, விபரம் அறிந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.