பிரதமர் மோடி ஓ.பி.சி., அல்ல! ராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடி ஓ.பி.சி., அல்ல! ராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு
ADDED : பிப் 09, 2024 01:21 AM
ஜார்சுகுடா, “பிரதமர் நரேந்திர மோடி ஓ.பி.சி., குடும்பத்தில் பிறக்கவில்லை,” என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை நடத்தி வருகிறார்.
கணக்கெடுப்பு
ஒடிசாவின் ஜார்சுகுடா பகுதிக்கு நேற்று யாத்திரை வந்தபோது ராகுல் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார்.
அவர், காஞ்சி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2000-ம் ஆண்டில் தான், குஜராத்தில் இருந்த பா.ஜ., அரசு, காஞ்சி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது.
இதன்படி பிரதமர், பிறப்பால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. பொதுப் பிரிவில் பிறந்ததால், அவர் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளார். அவர் தன் வாழ்நாள் முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கப் போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிலடி
பிரதமர் மோடியின் ஜாதி குறித்து ராகுல் விமர்சித்துள்ள நிலையில், அது குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
'பிரதமரின் ஜாதி குறித்த ராகுலின் அறிக்கை தொடர்பான உண்மைகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத்தின் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் ஓ.பி.சி.,க்கள் பிரிவு பட்டியலில், அங்குள்ள காஞ்சி ஜாதிப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
மண்டல் கமிஷனால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்த மோத் காஞ்சி பிரிவும் அடங்கும். இதையடுத்து, குஜராத்தில் உள்ள 105 ஓ.பி.சி., பிரிவுகள் அடங்கிய பட்டியலில் காஞ்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
பின், 2000ம் ஆண்டு ஏப்ரல் 4ல், இது துணைப் பிரிவாக ஓ.பி.சி., பட்டியலில் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தபோதும், மோடி குஜராத் முதல்வராக இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்து, சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி., பதவியை ராகுல் இழந்தார். பின், மேல்முறையீடு காரணமாக மீண்டும் பதவியில் அமர்ந்தார்.
தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல் தெரிவித்துள்ளார்.

