வீடு தேடி வரும் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
வீடு தேடி வரும் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : ஜன 09, 2024 12:02 AM

புதுடில்லி: ''மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரியாமல், அவற்றை பெற முடியாமல் இருந்த காலம் முடிந்து விட்டது. மக்களை நோக்கி, அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அரசின் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்ட பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வளர்ந்த பாரத உறுதியேற்பு யாத்திரையை மத்திய அரசு நடத்தி வருகிறது.
'வீடியோ கான்பரன்ஸ்'
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளோருடன், பிரதமர் மோடி நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த யாத்திரை சமீபத்தில் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதுவரை, 11 கோடி மக்களை சந்தித்துள்ளோம். இது, மத்திய அரசின் யாத்திரை அல்ல; நாட்டின் யாத்திரை மக்களின் யாத்திரை. மோடியின் உறுதிமொழி குறித்து தற்போது நாடு முழுதும் பேசப்படுகிறது.
அரசின் திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக மக்கள் காத்திருந்த காலம் மாறியுள்ளது.
தற்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறோம்.
இந்த யாத்திரையைத் தொடர்ந்து, பல லட்சம் மக்கள், தங்களுக்கான அரசின் திட்ட பலன்கள் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
வரும் 2047ல் நம் நாடு வளர்ந்த நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதை எட்ட இந்த யாத்திரை உதவுகிறது.
ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என, நம் நாட்டில் நான்கு ஜாதிகள் உள்ளன.
அரசின் நலத்திட்டம்
இந்த ஜாதியினர் பல தலைமுறைகளாக போராட்டங்களை சந்தித்து வந்துள்ளனர். இவர்கள் முன்னேறி, அதிகாரமுள்ளவர்களாக மாறினால் தான், நாடு வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட முடியும்.
இதை நோக்கியே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் தேவையில்லை என்ற நிலைக்கு இவர்களை உயர்த்துவதே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்