கள்ளக்குறிச்சி பெண் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!: சிறுதானியங்களை சிறப்பாக சந்தைப்படுத்துவதாக பெருமிதம்
கள்ளக்குறிச்சி பெண் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!: சிறுதானியங்களை சிறப்பாக சந்தைப்படுத்துவதாக பெருமிதம்
ADDED : ஜன 26, 2026 12:37 AM

புதுடில்லி: ''தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள், சிறுதானிய உணவுப் பொருட்களை நேரடியாக சந்தை வரை கொண்டு சேர்த்து வருவது உற்சாகத்தை அளிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அதே போல், ''ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது,'' என அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கி பாத்' எனப்படும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அதன்படி நேற்று ஒலிபரப்பான, இந்த ஆண்டின் முதல் மற்றும் 130வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், உலக நாடுகளின் பார்வை நம் மீது படிந்துள்ளது.
நம் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பயணம், 2016ல் துவங்கியது. 10 ஆண்டுகளுக்கு முன், கற்பனை செய்து பார்க்க முடியாத துறைகளில் எல்லாம் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன.
சமரசம் கூடாது
இதன் மூலம், உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய நாடாக நாம் உயர்ந்துள்ளோம்.
எனவே, நம் நாட்டு மக்கள் தரத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவக்கும் இளைஞர்கள், தொழில்முனைவோர் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அணுசக்தி, செமிகண்டக்டர், பயோ தொழில்நுட்பம், ஜவுளி, மின்னணு என எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறப்பான தரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்திய பொருட்கள் என்றாலே தரம் என்றாக இருக்க வேண்டும்.
இதனால், நம் நாட்டின் வளர்ச்சியை விரைவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சொந்தமாக துவங்குவோரை பாராட்டுகிறேன்.
மிகுந்த உற்சாகம்
நம் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ, கடந்த 2023ஐ சிறுதானிய ஆண்டாக நாம் அறிவித்திருந்தோம். அப்போது முதல், சிறுதானியங்கள் மீதான நம் நாட்டு மக்களின் ஆர்வமும், அர்ப் பணிப்பும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
குறிப்பாக, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெரியகல்வராயன் பகுதியில் வசிக்கும் பெண் விவசாயிகள் 800 பேர், குழுவாக சேர்ந்து சிறுதானியங்கள் பதப்படுத்தும் ஆலையை நிறுவியுள்ளனர்.
அங்கு தயாரிக்கும் சிறுதானிய உணவுப் பொருட்களை, அவர்கள் நேரடியாக சந்தைக்கு கொண்டு சென்று விற்கின்றனர். அவர்களது இந்த முயற்சி எனக்கு உற்சாகத்தை தருகிறது.
குப்பை கிடங்குகளை மறுசுழற்சி செய்வதற்கு பல்வேறு நகரங்களில் அர்ப்பணிக்கப்பட்ட குழுக்கள் இயங்குகின்றன. அப்படியொரு குழு, சென்னையில் மகத்தான பணியை செய்து வருகிறது.
சிறப்பான பணி
இந்த உதாரணம், ----------------துாய்மை தொடர்பான ஒவ்வொரு முயற்சியின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து செயல்பட்டு ----------------துாய்மைக்கான முயற்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நம் நகரங்கள் துாய்மையாகும்.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள் மிக சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள், இந்தியர்களின் முயற்சியால் இயங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.
தவிர, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பிற மொழிகளைக் கற்பிப்பது முதல் பாரம்பரிய இடங்களுக்கு நடைபயணங்களை மேற்கொள்வது, மேற்கு வங்கத்தின் ஜவுளி மற்றும் இசையை வெளிப் படுத்துவது என, அங்குள்ள இந்தியர்கள் அற்பு தமான செயல்களைச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

