ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ADDED : ஜூலை 27, 2025 12:27 PM

புதுடில்லி: ''ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,'' என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசுவோம். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது முழு தேசமும் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்தது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ள தேசிய விண்வெளி தினம் குறித்து உங்களுக்கு யோசனை இருந்தால் நமோ செயலில் எனக்கு அனுப்புங்கள்.
ஓலைச்சுவடிகள்
மஹாராஷ்டிராவில் 12 கோட்டைகளை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இந்த கோட்டைகள் நமது சுயமரியாதையை வெளிப்படுத்துகின்றன. நாடு முழுவதும் பல கோட்டைகள் இருக்கிறது. இந்த கோட்டைகளை மக்கள் பார்வையிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தஞ்சாவூரை சேர்ந்த மணி மாறன் தமிழ் ஓலைச்சுவடிகளை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்தார். இதனால் இன்று பல மாணவர்கள் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது
சில மாணவர்கள் இந்த கையெழுத்துப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். பண்டைய காலத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பின்னர் ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும்.
அங்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் அறிவியல் மரபுகள் கற்றுக்கொள்ள முடியும். இதனை கற்றுக்கொள்ள விரும்பினால் கலாசார அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இவை வெறும் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, இவை இந்தியாவின் அத்தியாயங்கள், நாம் வரும் தலைமுறையினருக்கு வழங்க வேண்டும்.
போபாலில் உள்ள 200 பெண்கள் நகரத்தில் உள்ள 17 பூங்காக்களை சுத்தம் செய்து துணி பைகளை விநியோகம் செய்துள்ளர். ஒவ்வொரு நாளும் நாம் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கும்போது தான் நாடு சுத்தமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பயற்சியை அளித்துள்ளேன்
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசியதை கேட்ட மணிமாறன், அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து
மணி மாறன் கூறியதாவது: நான் தமிழ்பண்டிதராகப் பணிக்கு வந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயற்சியை அளித்துள்ளேன்.
தமிழகத்திலும், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் புதைந்து கிடந்த சிற்பங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளேன். தற்போது ஆறு நுால்கள் எழுதி வருகிறேன். ஏடகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, இலவசமாக பலருக்கு சுவடிகள் படிப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறேன்.
ஏடகத்தில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்தி வருகிறேன். இதனால் வரலாற்று மற்றும் தொல்லியல் சார்ந்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். பொதுமக்களுக்கும் வரலாறு சார்ந்த விஷயங்களை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னை உலகம் முழுக்க அறிய செய்த பிரதமருக்கு நன்றி. இந்த பெருமையையும், பாராட்டுகளையும் எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள், சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். பிரதமரின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த மணிமாறன்?
தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக, தமிழ்பண்டிதர் மணி.மாறன், 55. இவர் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஹிந்துசமய அறநிலையத்துறைறயில், திருக்கோவில்கள் மறுசீரமைப்பு குழு, மாநில சுவடிகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்பல்கலைகழக சுவடியில் துறை பாடத்திட்டக்குழு, யுனெஸ்கோ அமைப்பில் திருக்குறள் அங்கீகாரம் பெறுவதற்கான குழு போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மேலும், சரஸ்வதி மஹால் நுாலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை திரட்டி, 20 நுால்களை வெளியிட்டுள்ளார். சரஸ்வதி மஹால் நுாலக பருவ இதழ்களில் ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், பிற வெளியீடுகளில் 13 நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார்.