உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... பீகாரில் பிரதமர் மோடி ஆவேசம்!
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... பீகாரில் பிரதமர் மோடி ஆவேசம்!
ADDED : ஏப் 24, 2025 01:42 PM

பாட்னா: ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் முதல் குமரி வரை வாழும் மக்கள் துக்கப்படுகிறோம். பஹல்காம் தாக்குதலால் நாடே கொந்தளிக்கிறது. பயங்கரவாதிகளை கட்டாயம் தண்டிப்போம். நாட்டில் பயங்கரவாதத்தை மொத்தமாக வேரறுப்போம். இந்த துயரமான நேரத்தில் எங்களுடன் துணை நிற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி.
உரிய தண்டனை
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடனும், வலியுடனும் உள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும், அவர்களுக்கு உதவியவர்களையும் இந்தியா கண்டறியும்; அவர்களது செயலுக்கு உரிய தண்டனை வழங்கியே தீரும்.
வேட்டையாடுவோம்
பயங்கரவாத தாக்குதலால் இந்தியா துவண்டு போகாது. அவர்கள் கனவிலும் நினைத்திராத தண்டனை கொடுக்கப்படும். காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். இன்று பீஹார் மண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு சொல்கிறேன். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.