UPDATED : மே 27, 2025 12:45 PM
ADDED : மே 27, 2025 11:12 AM

காந்தி நகர்: குஜராத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.
2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வதோதராவில், ரயில்களுக்கான 9,000 ஹெச்.பி., உள்ள இன்ஜின்கள் தயாரிக்கும் ஆலை உட்பட, 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களையும், வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார். முன்னதாக வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார்.
இந்த நிலையில், அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று காந்தி நகர் சென்றுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக ரோடு ஷோ நடத்தினார். அவரை சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, குஜராத் நகர்ப்புற வளர்ச்சியின் 20ம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். மஹாத்மா மந்தீரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,006 கோடியில் கட்டப்பட்ட 22,000 குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
காந்திநகரில் உள்ள யூ.என்., மேக்தா இருதயவியல் கல்வி நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார். இதேபோல, பல திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.