பெட்ரோல், உரங்கள் வினியோகம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
பெட்ரோல், உரங்கள் வினியோகம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ADDED : மார் 23, 2026 06:17 AM

புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம், உரங்கள் கையிருப்பு மற்றும் வினியோகம் குறித்து, மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த உயர்நிலை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவ்ராஜ் சிங் சவுஹான், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பீயூஷ் கோயல் பங்கேற்றனர்.
அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனாவால், மனோகர் லால் கட்டார், பிரஹலாத் ஜோஷி, ராம்மோகன் நாயுடு, ஹர்தீப் சிங் புரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் இரு முதன்மை செயலர்களான மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பு, மின்சாரம் மற்றும் உரங்கள் வினியோகம் குறித்து, இந்த கூட்டத்தில் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
போர் பதற்றம் காரணமாக, நம் நாட்டில் சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டது. மத்திய அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால், நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த உயர்நிலை கூட்டத்தில் எரிபொருள், மின்சாரம், உரங்கள் கையிருப்பு குறித்தும், அவற்றை தங்கு தடையின்றி வினியோகிப்பதை உறுதி செய்வது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

