நாட்டில் மீண்டும் பிரதமர் மோடி அலை மாநில தலைவர் விஜயேந்திரா பெருமிதம்
நாட்டில் மீண்டும் பிரதமர் மோடி அலை மாநில தலைவர் விஜயேந்திரா பெருமிதம்
ADDED : பிப் 15, 2024 05:27 AM

பெங்களூரு : ''கர்நாடகா உட்பட நாடு முழுதும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற அலை எழுந்துள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு சஞ்சய் நகர் பூபசந்திரா பிரதான சாலையில், ஹெப்பால் மண்டல பா.ஜ., அலுவலகத்தை நேற்று மாநில தலைவர் விஜயேந்திரா, தொகுதி எம்.பி., சதானந்த கவுடா ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது விஜயேந்திரா அளித்த பேட்டி:
கர்நாடகாவில், 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் சூழல் நலவுகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பிரபலமும், மத்திய அரசின் திறமையான நிர்வாகமும் தான் காரணம்.
இத்தொகுதியில் பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற, அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். நாம் அனைவரும் நரேந்திர மோடி என்று நினைத்து, செயல்வீரர்களாக நம் பலத்தை வளர்த்து கொள்வோம்.
மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகா உட்பட நாடு முழுதும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற அலை எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் எதிர்பார்க்காத அளவில் பின்னடைவு ஏற்பட்டது. ஆளும் கட்சியாக இருந்து, 66 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்து உள்ளோம். ஆனால், தற்போது மீண்டும் மோடியின் அலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, ஹெப்பால் மண்டல பா.ஜ., அலுவலகத்தை, மாநில தலைவர் விஜயேந்திரா, தொகுதி எம்.பி., சதானந்த கவுடா ஆகியோர் திறந்து வைத்தனர். இடம்: சஞ்சய் நகர், பெங்களூரு.

