மீண்டும் பா.ஜ., ஆட்சியை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு கலபுரகி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
மீண்டும் பா.ஜ., ஆட்சியை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு கலபுரகி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
ADDED : மார் 16, 2024 10:54 PM

கலபுரகி: லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கர்நாடக மாநிலம், கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்து, 'பிள்ளையார் சுழி' போட்டார். “மக்கள் உற்சாகத்தை பார்க்கும்போது, மீண்டும் பா.ஜ., தான் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டதை உணர முடிகிறது,” என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்தும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
அந்த வகையில், கர்நாடகாவில் 'பா.ஜ., சங்கல்பம்' என்ற மாநாடு, கலபுரகியில் நேற்று நடைபெற்றது. 2019லும் இதே கலபுரகியில் தான் பிரசாரத்தைத் துவங்கி பா.ஜ., வெற்றிக்கு பிள்ளையார் சுழிபோடப்பட்டது.
அதனால், அப்போது மாநிலத்தின் 28 தொகுதிகளில், 26ல் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பிரசாரம் துவக்கம்
அதன்படி பிரசார மாநாட்டை நேற்று துவக்கிவைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஹெலிபேடில் இறங்கி காரில் வந்தபோது, மக்கள் உற்சாகத்தை பார்த்ததும், மீண்டும் பா.ஜ., தான் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டதை உணர முடிந்தது.
சுதந்திரத்துக்கு பின், ஸ்ரீநகரில் மிகப்பெரிய அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, கேரளாவின் பட்டனந்திட்டா, தெலங்கானாவின் நாகர்கர்னுால், ஹைதராபாத் என, நான் சென்ற அனைத்து இடங்களிலும் மீண்டும் ஒருமுறை பா.ஜ., ஆட்சி தான் அமைய வேண்டும் என்று மக்கள் சங்கல்பம் செய்துள்ளதை காண முடிந்தது.
இதேபோன்று, கர்நாடக மக்களும் முடிவு செய்துவிட்டனர். மாநிலம் முழுதும் பா.ஜ.,வுக்கு ஆதரவான அலைவீசுகிறது.
சட்டசபை தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே மக்களுக்கு புரிந்துவிட்டது. மக்கள் எவ்வளவு திருத்த முயற்சித்தாலும், ஊழல் செய்யும் காங்கிரசார் திருந்தவே மாட்டார்கள்.
பா.ஜ., வெற்றியை நாடே கொண்டாடுவதாக, கலபுரகியை சேர்ந்த அக்கட்சித் தலைவர் பார்லிமென்டில் சொல்கிறார். காங்கிரசுக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷமடைந்துள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஊழல் மட்டுமே முக்கியம். ஊழல் செய்ய முடியாமல் அவர்களால் மூச்சு கூட விட முடியாது.
தேர்தலுக்கு முன்பு மக்களை கவரும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் அளிப்பார்கள். தேர்தல் முடிந்த பின்னர், அவர்களின் பாக்கெட் மட்டுமே நிரப்பிக் கொள்வர்.
'பிரதமர் கிசான்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உயர் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டத்தையும் நிறுத்திவிட்டனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர். இப்படி செய்தால், விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய முடியும்? கர்நாடக அரசு, மக்களுக்கு மோசம் செய்கிறது.
சாம்பல் மிச்சம்
மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை. சமூக விரோதிகளுக்கு அரசே பகிரங்கமாக ஆதரவு தருகிறது. கர்நாடகாவை தன் குடும்பத்தின் ஏ.டி.எம்., ஆக காங்கிரஸ் மேலிடம் மாற்றிக் கொண்டுள்ளது.
மக்கள் சம்பாதித்ததை, தன் குடும்ப செலவுக்கும், கட்சிக்கும் பயன்படுத்துகின்றனர். நிலக்கரியால், சாம்பல் ஆவது மிச்சம் கிடைக்கும். ஆனால், காங்கிரசாரால், ஊழலில் இருந்து விட முடியாது. அவர்களுக்கு ஊழல் தான் ஆக்சிஜன்.
லோக்சபா தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் தயாராகிவிட்டன. தேர்தலில் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் வருகையை ஒட்டி, அவர் பங்கேற்ற மாநாட்டு மைதானம், அவர் பயணம் செய்த சாலைகள் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

