முந்தைய ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த பழைய வேலை கலாசாரம் ஒழிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
முந்தைய ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த பழைய வேலை கலாசாரம் ஒழிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
ADDED : செப் 29, 2024 11:54 PM

புனே,“முந்தைய ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய வேலை கலாசாரம் ஒழிக்கப்பட்டதால், நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்துக்கான 11,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அவற்றில் சிலவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
கடுமையான சட்டங்கள்
டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக புனே மெட்ரோ திட்டத்தின் முதற்கட்ட பணிகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
முந்தைய ஆட்சியில் பின்பற்றப்பட்டு பழைய வேலை கலாசாரத்தால், வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டன.
இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. பழைய முறை பின்பற்றப்பட்டு இருந்தால், புனே மெட்ரோ திட்டம் ஒருபோதும் நிறைவேறி இருக்காது.
கடந்த 2008ல் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, 2016ல் நாங்கள் அடிக்கல் நாட்டினோம். தற்போது அது நிறைவுஅடைந்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசு, மும்பை -- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் இருந்த அனைத்து தடைகளையும் நீக்கியுள்ளது. தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் நவீன உட்கட்டமைப்பு இருக்க வேண்டும்.
அது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்க வேண்டும்.
முந்தைய அரசுகளின் பழைய வேலை கலாசாரத்தை நாங்கள் மாற்றி உள்ளோம். பெண்கள் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள், மகளிர் இடஒதுக்கீடு மசோதா போன்றவை இயற்றப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில்
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெண்களுக்கான கழிப்பறைகள் உருவாக்கப்பட்டன. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உச்சத்தை அடைய நாம் இன்னும் பல கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புனேவின் பிதேவாடாவில் உள்ள கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலேவின் முதல் பெண்கள் பள்ளிக்கான நினைவிடத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
புனேவில் உள்ள ஸ்வார்கேட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை சென்ற மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் 4.1 லட்சம் பயணியர் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சோலாப்பூர் விமான நிலையத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
சத்ரபதி சம்பாஜி நகருக்கு அருகே அமைந்துள்ள தேசிய தொழில்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட பிட்கின் தொழில்துறை பகுதியையும் மோடி திறந்து வைத்தார்.