நாட்டை வளர்ந்த தேசமாக்குவதில் பெண்களுக்கு மிகப்பெரும் பங்கு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
நாட்டை வளர்ந்த தேசமாக்குவதில் பெண்களுக்கு மிகப்பெரும் பங்கு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
UPDATED : ஜன 04, 2024 01:20 PM
ADDED : ஜன 04, 2024 01:32 AM

பாலக்காடு, ''நம் நாட்டை வளர்ந்த தேசமாக்குவதில், மிகப்பெரிய பங்கு பெண்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். காரணம், பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள், மன உறுதி, துணிச்சல் மிக்கவர்கள்,'' என, திருச்சூரில் நடந்த பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கேரள மாநிலம், திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நேற்று மாலை பா.ஜ., மகளிர் அணி மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
'உஜ்வாலா' திட்டம் வாயிலாக, 10 லட்சம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 30 கோடிக்கும் மேலான பெண் வாடிக்கையாளர்களுக்கு, முத்ரா என்ற பெயரில் கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியருக்கு மகப்பேறு விடுப்பு, 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும், காங்., மற்றும் கம்யூ., கூட்டணி ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை.
அனைவரின் ஆசிர்வாதத்தால், பா.ஜ., அரசு பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து, தனித்துவமான முக்கியத்துவம் அளித்து, போற்றி, பாதுகாத்து வருகிறது.
பா.ஜ., தலைமையிலான அரசு நான்கு சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் ஒரு சமுதாயம் இந்நாட்டில் உள்ள ஏழை-, எளிய மக்கள். இரண்டாவது இங்குள்ள வாலிபர்கள். அடுத்தது விவசாயிகள், பெண்கள். இவர்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.
நம் நாட்டை வளர்ந்த தேசமாக்குவதில், மிகப்பெரிய பங்கு பெண்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். காரணம், பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள், மன உறுதி, துணிச்சல் மிக்கவர்கள்.
மாநிலங்களின் வளர்ச்சி வாயிலாக, நாடு வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். மத்திய அரசு அளிக்கும் பணத்துக்கு கணக்கு கேட்கக் கூடாது என்பது சிலரது கொள்கை. அப்படி கணக்கு கேட்டால், மத்திய அரசு திட்டங்களுக்கு இடையூறு செய்கின்றனர்.
'இண்டியா' கூட்டணி மத்திய அரசின் பல்வேறு நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இதை மக்கள் அறிவர். அடிப்படை வசதிகள் இல்லாத சபரிமலையின் தற்போதைய நிலைமையை கண்டு கவலை அடைகிறேன். இது மாநில அரசின் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
தேசம் முழுதும் இருந்து, சபரிமலை வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அனைவரின் நம்பிக்கைகளையும் பா.ஜ., அரசு மதிக்கிறது. அதனால் தான், வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் உள்ளது.
இவ்வாறு, பிரதமர் பேசினார்.
மாநாட்டில் இரண்டு லட்சம் மகளிர் பங்கேற்றனர்.