ADDED : டிச 08, 2024 04:16 AM

ஆமதாபாத்: ''பாப்ஸ் அமைப்பின் தன்னார்வலர்களின் செயல்பாடு, உலகளவில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
'பாப்ஸ்' எனப்படும், 'போச்சசன்வாசி ஸ்ரீ அக் ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா' என்ற அமைப்பு நம் நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பிரமாண்டமான ஹிந்து கோவில்கள் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
இந்த அமைப்பின் தன்னார்வலர்கள், பேரிடர் சமயங்களில் பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். பாப்ஸ் அமைப்பின், தன்னார்வலர்கள் கூட்டம் குஜராத்தின் ஆமதாபாதில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் கூறியதாவது:
பாப்ஸ் அமைப்பின் பணி, பகவான் சுவாமிநாராயணனின் போதனைகள் வாயிலாக உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது.
இந்த அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், எந்த நெருக்கடியான சூழலிலும் பெருந்துயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணை உள்ளத்துடன் சேவை செய்து வருகின்றனர். இவர்களின் இந்த அரிய பணியால், நம் நாடு வலிமை பெறுகிறது. இவர்களின் சிறப்பான செயலால், உலகளவில் நம் நாட்டின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
பாப்ஸ் அமைப்பின் தன்னார்வலர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம் ஒன்றுதான். எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கை விவசாயம், வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பரப்புதல், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுங்கள். வரும் 2047க்குள் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.