'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழுக்கு பிரதமர் புகழாரம்!: உலகின் தொன்மையான மொழி என பெருமிதம்
'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழுக்கு பிரதமர் புகழாரம்!: உலகின் தொன்மையான மொழி என பெருமிதம்
ADDED : டிச 29, 2024 11:32 PM

புதுடில்லி: “உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்குமான பெருமை,” என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில், 'மன் கீ பாத்' எனப்படும், மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்கள் மத்தியில் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த மாதத்துக்கான நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்குகிறது. வரும் ஜன., 26ல், நம் அரசியலமைப்பு சட்டம் உருவாகி, 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்கும் வகையாக, constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை
அரசியல் சட்டத்தின் முன்மொழிவாசிக்கும் வகையில், உங்களுடைய காணொளியை இதில் பதிவேற்றம் செய்யலாம். பல்வேறு மொழிகளில் அரசியல் சட்டத்தை வாசிக்கலாம்; அரசியல் சட்டம் தொடர்பான வினாக்களை எழுப்பலாம்.
இந்த இணையதளத்தை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
வரும் 13ம் தேதி முதல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில், கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சங்கமிக்கின்றனர். லட்சக்கணக்கான புனிதர்கள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக உள்ளது.
எந்த வேறுபாடுமின்றி, ஏராளமானோர் இங்கு ஒன்று கூட உள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த காட்சியை, உலகில் வேறு எங்கும் காண முடியாது. இது நம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
மகா கும்பமேளாவின் சிறப்பு, அதன் பரந்த தன்மையில் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையிலும் உள்ளது.
கும்பமேளாவில் பங்கேற்றுத் திரும்பும் போது, சமுதாயத்தில் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வுக்கு முடிவுகட்டும் உறுதிப்பாட்டை நாம் ஏற்போம்.
தடையின்றி ஓடும் கங்கையைப் போல், நம் சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும். தென் அமெரிக்காவில் பராகுவே என்றொரு நாடு உள்ளது.
தமிழ் கற்பித்தல் திட்டம்
அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்காது. இந்த நாட்டில் அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்குள்ள இந்திய துாதரகத்தில், ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது. அவற்றைப் பெற ஏராளமான உள்ளூர் மக்கள் ஆவலுடன் அங்கு வருகின்றனர்.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ்; இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரும் விஷயம். உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில், பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜிவில், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த 80 ஆண்டுகளில், பிஜி வாயிலாக தமிழில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவிப்பது இதுவே முதல்முறை. பிஜி மாணவர்கள் தமிழ்மொழியையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பெரும் பங்கு
கடந்த 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டில் மலேரியா நோயாளிகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல.
அதேபோல், புற்று நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' பெரும் பங்கு வகித்துள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக, 90 சதவீத புற்று நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையை துவங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

