மலேஷியாவில் 'ஆசியான்' உச்சி மாநாடு 'ஆன்லைன்' மூலம் பிரதமர் பங்கேற்பு
மலேஷியாவில் 'ஆசியான்' உச்சி மாநாடு 'ஆன்லைன்' மூலம் பிரதமர் பங்கேற்பு
ADDED : அக் 24, 2025 12:36 AM
புதுடில்லி: மலேஷியாவில், வரும் 26ல் துவங்க உள்ள ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, 'ஆன்லைன்' மூலம் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
'ஆசியான்' கூட்டமைப்பில், தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உட்பட, 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஆண்டு ஆசியான் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு மலேஷியா வசம் உள்ளது. நாம் இந்த அமைப்பின் முக்கிய நட்பு நாடாக உள்ளோம்.
ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு வரும் 26ல் துவங்கி 28 வரை மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிரதமர் மோடி நேற்று பேசினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மலேஷிய பிரதமருடன் சிறப்பான உரையாடல் நடந்தது. ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கும், வர உள்ள உச்சி மாநாட்டிற்கும் அவரிடம் என் வாழ்த்துகளை பகிர்ந்தேன்.
'இந்த மாநாட்டில் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளேன். ஆசியான் - இந்தியா உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன்' என கூறினார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் மலேஷிய பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற அவர், வரும் 26ல் இரண்டு நாள் பயணமாக கோலாலம்பூர் வர உள்ளார்.

