தூதரக உறவு உருவாகி 70 ஆண்டுகள் நிறைவு: ஓமன் செல்கிறார் பிரதமர்
தூதரக உறவு உருவாகி 70 ஆண்டுகள் நிறைவு: ஓமன் செல்கிறார் பிரதமர்
UPDATED : டிச 12, 2025 09:18 PM
ADDED : டிச 12, 2025 09:10 PM

புதுடில்லி: இந்தியா ஓமன் இடையே தூதரக உறவுகள் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக அதிகாரி அருண் குமார் சாட்டர்ஜி கூறியதாவது: ஜோர்டான், எத்தியோப்பியா நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி வரும் 17 - 18 ஆகிய தேதிகளில் ஓமன் நாட்டிற்கு செல்ல உள்ளார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சயீத் அழைப்பின் பேரில் அங்கு செல்ல உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு உருவாகி 70 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், பிரதமரின் இந்த பயணம் அமைகிறது.
பிரதமரின் உயர்மட்டக் குழு செல்ல உள்ளது. ஓமன் நாட்டிற்கு பிரதர் செல்ல உள்ளது. இது இரண்டாவது முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது, இரு தரப்பு உறவு குறித்து விவாதத்துடன் பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.ஓமன் நாட்டின் விமானப்படையில் உள்ள ஜாகுவார் போர் விமான உதிரி பாகங்களை இந்தியாவுக்கு வழங்க ஓமன் முன்வந்துள்ளது.
இது குறித்து அருண் குமார் சாட்டர்ஜி கூறியதாவது: ஜாகுவார் போர் விமானங்களை, ஓமன் விமானப்படை பயன்படுத்தி வந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அதனை நிறுத்திவிட்டது. தற்போது அந்த விமானங்களின் உதிரி பாகங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறையில் இரு நாடுகள் இணைந்து பயிற்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யஇரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

