மஹா., முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
மஹா., முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
UPDATED : நவ 27, 2024 06:29 PM
ADDED : நவ 27, 2024 05:05 PM

மும்பை: '' மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேநேரத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகின. ஆனால், கூட்டணி கட்சிகள் பேசி ஒரு மித்த முடிவு எடுக்கப்படும் என பா.ஜ., கூறி வந்தது. இதனால், முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் நிருபர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர். நான் மக்களின் முதல்வர். மக்களுக்காக பணியாற்றினேன். இறுதிவரை மக்களுக்காக பணியாற்றுவேன். புகழுக்காக முதல்வர் ஆகவில்லை. நான் ஒரு தொண்டராகவே பணியாற்றினேன்.
முதல்வராக என்னை எப்போதும் கருதியது கிடையாது. 'சிஎம்' என்றால் சாமானிய மனிதன். இதனை கருத்தில் கொண்டு பணியாற்றினோம். நாம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாங்கள் செயல்படுத்திய திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டனர்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி. இருவர் உடனும் தொலைபேசியில் பேசினேன். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் எப்போதும் நான் தடையாக இருக்க மாட்டேன் என அவர்களிடம் உறுதி அளித்தேன்.
மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். தே.ஜ., கூட்டணி தலைவர் என்ற முறையில் முடிவு எடுக்கும்படி பிரதமரிடம் கூறியுள்ளேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவரின் முடிவை பா.ஜ.,வினர் எப்படி ஏற்றுக் கொள்கின்றனரோ, அதுபோல் நாங்களும் ஏற்றுக் கொள்வோம். என்னால் எந்த பிரச்னையும் இருக்காது என அவர்களிடம் உறுதி அளித்தேன். முதல்வராக யாரை கூட்டணி முடிவு செய்கிறதோ அவருக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு ஷிண்டே கூறினார்.