ADDED : நவ 02, 2024 03:36 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரும், பொருளாதார நிபுணருமான விவேக் டெப்ராய், 69, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விவேக் டெப்ராய். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக இருந்த இவர், சமீப காலமாக குடல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'விவேக் டெப்ராய், உயர்ந்த அறிஞராக திகழ்ந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், அரசியல், ஆன்மிகம் என, பல துறைகளில் வல்லுனராக திகழ்ந்தார்.
'அவரது படைப்புகள் வாயிலாக நம் நாட்டின் அறிவுசார் நிலப்பரப்பில் ஓர் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
'விவேக் டெப்ராயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபுரியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த டெப்ராய், இளங்கலை பட்டத்தை கோல்கட்டாவின் பிரசிடென்சி கல்லுாரியில் முடித்தார். உயர் கல்வியை டில்லி பொருளாதார கல்லுாரி மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லுாரியிலும் பயின்றார்.
கோல்கட்டா பிரசிடென்சி கல்லுாரியில் விரிவுரையாளராக பணியை துவக்கிய விவேக் டெப்ராய், மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார மையத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.
மத்திய நிதி அமைச்சகத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார். நிடி ஆயோக்கின் உறுப்பினராக 2019ல் டெப்ராய் பொறுப்பேற்றார்.
இதுதவிர, பொருளாதாரம் சார்ந்த ஏராளமான புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக பணியாற்றி வந்தார். மத்திய அரசின் முக்கியமான பொருளாதார கொள்கை முடிவுகளில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது, பொருளாதார சேவையை பாராட்டி, நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது 2015ல் வழங்கப்பட்டது.