பிரதமர் படிப்பு விவகார வழக்கு: விசாரணை நிறுத்திவைப்பு
பிரதமர் படிப்பு விவகார வழக்கு: விசாரணை நிறுத்திவைப்பு
ADDED : ஜன 17, 2024 01:37 AM

புதுடில்லி : பிரதமர் மோடியின் படிப்பு தொடர்பாக அவதுாறாக கருத்து தெரிவித்ததாக, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு தொடர்பான விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். இதுகுறித்து தகவல்கள் அளிக்கும்படி, குஜராத் பல்கலைக்கு, மத்திய தகவல் ஆணையம், 2016ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியின் எம்.பி.,யான சஞ்சய் சிங் சில கருத்துக்களை வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் மீது, குஜராத் பல்கலை சார்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை ரத்து செய்யக்கோரி, இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை, குஜராத்தில் இருந்து மாற்றக் கோரி இருவரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:
கீழ் நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மன்களை ரத்து செய்யக்கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுவின் மீது, நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

