பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 ஒதுக்கீடு: சிறையில் 8 மணி நேரம் வேலை, தினசரி கூலி ரூ.524
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 ஒதுக்கீடு: சிறையில் 8 மணி நேரம் வேலை, தினசரி கூலி ரூ.524
ADDED : ஆக 03, 2025 08:35 PM

பெங்களூரு; ஆயுள் தண்டனை பெற்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறையில் தினசரி 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அதற்கு தினக்கூலியாக ரூ.524 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட 4 பாலியல் வழக்குகளில் ஒரு வழக்கில் தான் ஆயுள் சிறை அளிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 3 வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரஜ்வலுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கான அறையில் அடைக்கப்பட்டது வரை பிரஜ்வல் எப்படி இருந்தார், எல்லோரையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பது பற்றிய புதிய தகவல்களை மூத்த சிறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
அதுபற்றிய விவரம் வருமாறு;
கோர்ட் தண்டனை அறிவிப்புக்கு பின்னர், பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கதறி, கண்ணீர்விட்ட படியே தான் அவர் இருந்திருக்கிறார். மேலும் மனதளவில் உடைந்து போனவராகவே காணப்பட்டு உள்ளார்.
சிறையில் கைதிகள் அடைக்கப்படும் போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படி அவருக்கும் நடத்தப்படும் போது, பிரஜ்வல் மிகுந்த கோபமாகவே இருந்துள்ளார். மனம் உடைந்து அழுதே விட்டார்.
அதன் பின்னர், வழக்கு தொடர்பான தான் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார். சிறையில் அதி உயர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உடைதான் பிரஜ்வலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு இன்று(ஆக.3) காலை கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டு உள்ளது. தினமும் 8 மணிநேரம் வேலையாளாக பணி செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு தினசரி கூலியாக ரூ.524 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

