தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போலி ஆவணம் மூலம் கைதி விடுவிப்பு கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., கைது

போலி ஆவணம் மூலம் கைதி விடுவிப்பு கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., கைது

போலி ஆவணம் மூலம் கைதி விடுவிப்பு கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., கைது


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 09:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: உச்ச நீதிமன்றம் பெயரில் போலி உத்தரவு தயாரித்து, ஆயுள் கைதியை விடுதலை செய்த வழக்கில், கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஆறுமுகம். இவர், 2001 காலகட்டத்தில் பெங்களூரில் குற்ற செயல்களில் ஈடுபட்டார். பெங்களூரு தொழிலதிபரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், சங்கர் ஆறுமுகத்துக்கு 2014ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு உச்ச நீதிமன்றத்தின் பெயரில், ‘கூரியர்’ தபால் வந்தது.

அதில், ‘ஆயுள் கைதி சங்கர் ஆறுமுகம் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுவிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, அவர் விடுவிக்கப்பட்டார்.

* ரகசிய புகார்

இந்நிலையில் கடந்த மே மாதம் சிறை துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு வந்த ரகசிய புகாரில், ‘போலி ஆவணங்கள் மூலம் சங்கர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டார்’ என கூறப்பட்டு இருந்தது.

சிறை துறை அதிகாரிகள், உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘சங்கர் ஆறுமுகத்தை விடுவிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என்பது தெரிந்தது. இதுதொடர்பாக சிறை துறை அதிகாரி அளித்த புகாரில், பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது.

மைசூரில் தலைமறைவாக இருந்த சங்கர் ஆறுமுகம், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் பெயரில் போலி உத்தரவு தயாரித்து வழங்கிய சிறையின் முதல்நிலை ஊழியர் ஸ்ரீகாந்த்தும் கைது செய்யப்பட்டார்.

* கைமாறிய பணம்

தொடர் விசாரணையில், சங்கர் ஆறுமுகத்தை விடுவித்த வழக்கில், சிறை துறை வடக்கு மண்டல டி.ஐ.ஜி., சோமசேகருக்கும் தொடர்பு இருந்தது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

சங்கர் ஆறுமுகம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, சிறை கண்காணிப்பாளராக சோமசேகர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதற்காக, லட்சக்கணக்கில் பணம் கைமாறியதும் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us