போலீசை சுட்டு தப்பிய கைதி மே.வங்கத்தில் சுட்டுக்கொலை
போலீசை சுட்டு தப்பிய கைதி மே.வங்கத்தில் சுட்டுக்கொலை
ADDED : ஜன 19, 2025 02:04 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடிய விசாரணைக் கைதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரன்டிஹி பகுதியை சேர்ந்தவர் சஜாக் ஆலம்.
தேடும் பணி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 15ல் இஸ்லாம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் மீண்டும் சிறைக்கு போலீஸ் வேனில் ஆலம் அழைத்து செல்லப்பட்டார்.
பஞ்ஜிபாரா பகுதியில் வேன் சென்றபோது, பாதுகாப்பு படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளை பறித்த ஆலமும், அவரது நண்பரான மற்றொரு கைதியும் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் இரு போலீசார் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று கோல்போகர் பகுதியில் உள்ள கிச்சக்தலா எல்லை பகுதியில் பதுங்கியிருந்த ஆலமை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது கிச்சக்தலா பாலம் வழியே அண்டை நாடான வங்கதேசத்துக்கு ஆலம் தப்ப முயன்றது தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்தனர்.
படுகாயம்
ஆனால் அவர் சரணடைய மறுத்ததுடன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டதில், ஆலம் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு போலீசார் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆலம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.