போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கைதி மனைவியுடன் சிக்கினார்
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கைதி மனைவியுடன் சிக்கினார்
ADDED : ஆக 08, 2025 02:57 AM
திருவனந்தபுரம்:கொல்லத்தில், போதைப் பொருள் வழக்கில் கைதான கணவரை, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்ப வைத்த மனைவி, கணவருடன் தமிழகத்தில் சிக்கினார்.
கேரள மாநிலம், கொல்லம் அருகே கிளிக்கொல்லுாரைச் சேர்ந்தவர் அஜுமன்சூர். இவர் மீது எம்.டி.ஏ., கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று முன்தினம், இவரை கொல்லம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது, கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக்கூறி சென்ற அஜுமன்சூர், திடீரென மாயமானார். போலீசார், அவரை கோர்ட்டிற்கு அழைத்துச் செல்ல தேடிய போது, மாயமானது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அஜுமன்சூர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறி, அங்கு தயாராக காத்திருந்த தன் மனைவி பின்சியின் ஸ்கூட்டரில் ஏறி சென்றது தெரிந்தது.
இதையடுத்து, பின்சி மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், தம்பதியை தேடினர். இவர்கள் தமிழகத்துக்கு தப்பி இருக்கலாம் என கருதிய கேரள போலீசார், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், தோப்பூரில் சிக்கிய இருவரையும் போலீசார் கைது செய்து, கொல்லம் அழைத்து சென்றனர்.

