ADDED : மார் 16, 2025 11:34 PM
கலபுரகி: பிரியாணி வழங்கும்படி, சிறை கைதிகள் கூச்சலிட்டு தகராறு செய்த சம்பவம், கலபுரகி சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலபுரகி நகரின், புறநகரில் ஜேவர்கி சாலையில் மத்திய சிறை உள்ளது. இதில் பல்வேறு குற்றங்கள் செய்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர்.
ரம்ஜான் பண்டிகை என்பதால், சிறையில் நோன்பு இருக்கும் கைதிகள், தங்களுக்கு பிரியாணி மற்றும் பழங்கள் வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே நேற்று இவர்களின் குடும்பத்தினர் பிரியாணி தயாரித்து, சிறைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதை உள்ளே கொண்டு செல்ல சிறை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த கைதிகள், பிரியாணி, பழங்கள், இனிப்பை சாப்பிட அனுமதிக்கும்படி போராட்டம் நடத்தினர்.
இதையறிந்த உயர் அதிகாரிகள், உறவினர்கள் கொண்டு வந்த பிரியாணி, பழங்கள், தின்பண்டங்களை பரிசோதித்து, உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி சோதனை செய்து, கைதிகளிடம் வழங்கப்பட்டது.